மும்பையில் சிவப்பு விளக்கு பகுதியிலிருந்து ஸ்வேதா கட்டி என்னும் இளம்பெண் மேற்படிப்புக்காக அமெரிக்காவுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
மும்பையில் பாலியல் தொழிலாளிகள் வசித்து வரும் காமாத்திபுரா சிவப்பு விளக்குப் பகுதியில் பிறந்து வளர்ந்தவர் ஸ்வேதா கட்டி(18).
இவர் படிப்பில் அதிக கவனம் செலுத்தியதன் மூலம் அமெரிக்காவுக்கு மேற்படிப்புக்காக செல்லக்கூடிய வாய்ப்பை பெற்றிருக்கிறார்.
தாழ்ந்த சாதி, வறுமை நிலை காரணமாக தான் படித்த பள்ளியில் கூட பாரபட்சமாக நடத்தப்பட்டபோதும், தனது படிப்பிலிருந்து கவனத்தை தவறவிடவில்லை ஸ்வேதா.
இதனால் அந்தப் பகுதியில் பெண்களின் சமூக மாற்றத்திற்காக செயற்பட்டு வரும் தொண்டு நிறுவனமான கிரந்தி அவருக்கு கல்வியில் உதவ முன்வந்தது.
அக்கல்வி நிறுவனத்தின் உதவியில் தனது ஆங்கில மொழித் திறமையையும், தனது விருப்ப பாடமான மனோதத்துவ துறைக்கான அறிவையும் விருத்தி செய்து கொண்ட ஸ்வேதா, அமெரிக்காவில் மேற்படிப்புக்கான வாய்ப்பை பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் பார்ட் கல்லூரி அவருக்கு இந்த வாய்ப்பினை வழங்கியுள்ளது.
எனினும் இவரது தந்தை உட்பட பல்வேறு நபர்களால் பாலியல் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.
இது குறித்து ஸ்வேதா கூறுகையில், படிப்பு முடித்து இந்தியா திரும்பிய பின்பு சமூகத்தில் குறிப்பாக சிவப்பு விளக்குப் பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள இளம்பெண்களுக்கு உதவுவதே தனது நோக்கம் என்று தெரிவித்துள்ளர்.