தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்தவர் நடிகை கனகா. முன்னாள் நடிகை தேவிகாவின் மகளான இவர் 1989–ம் ஆண்டு நடிகர் ராமராஜனுடன் நடித்த ‘கரகாட்டக்காரன்’ படம் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் ஓடி கனகாவை திரையுலகின் உச்சானி கொம்புக்கு கொண்டு சென்றது. இதனால் கனகாவுக்கு தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கிலும் வாய்ப்புகள் குவிந்தது.
தமிழில் ரஜினி, பிரபு, கார்த்திக் என முன்னணி நடிகர்களுடன் நடித்தது போல் மலையாளத்தில் மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் என பிரபல முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்தார். முகேஷ்யுடன் இணைந்து நடித்த ‘காட்பாதர்’ என்ற படம் கேரளாவில் 200 நாட்களையும் தாண்டி ஓடி சாதனை புரிந்தது. இதனால் எந்நேரமும் பிசியாக இருந்த நடிகை கனகா 90–ம் ஆண்டு இறுதிகளில் திடீரென காணாமல் போனார்.
2000–வது ஆண்டில் அவரது தாயாரும் மறைந்து போக கனகா தனிமரம் ஆனார். இந்த நிலையில் கனகா உடல்நலக்குறைவால் அவதிப்படுவதாகவும், அவரை கவனிக்கவும், பராமரிக்கவும் ஆளில்லாமல் திண்டாடுவதாகவும் செய்திகள் வெளியானது. காலப்போக்கில் அதுவும் நின்று போக கனகாவின் நிலை என்ன? என்பதே தெரியாமல் இருந்தது. சமீபத்தில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகைச் சேர்ந்த பழைய பிரமுகர் ஒருவர் ஆலப்புழாவில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்றார். அது அனாதைகள் மற்றும் கவனிப்பாரின்றி அவதிப்படுவோரை பராமரித்து சிகிச்சை அளிக்கும் ஆஸ்பத்திரியாகும்.
இங்கு புற்றுநோயால் அவதிப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு நடிகை கனகாவும் சிகிச்சை பெறுவதை கண்டு அந்த நபர் அதிர்ந்து போனார். அவர், இதனை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள தற்போது கனகா கேரளாவில் உள்ள ஆலப்புழா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவது தெரிய வந்துள்ளது. அவர், அங்கு புற்று நோய்க்குதான் சிகிச்சை பெறுகிறார் என்றும் கூறப்படுகிறது.
சினிமாவில் பணமும், புகழும் சம்பாதித்தவர், காந்த கண் அழகால் ரசிகர்களை கட்டிப் போட்டவர் இப்போது யாருமின்றி ஆஸ்பத்திரியில் தனிமரமாக சிகிச்சை பெற்று வருவது அவரது ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தி உள்ளது.