முன்னாள் கதாநாயகிகள் பலர் மீண்டும் சினிமாவில் நடிக்க துவங்கியுள்ளனர். அம்மா, அண்ணி, அக்காள் கேரக்டரில் வருகிறார்கள்.
நடிகைகள் நதியா, ரோஜா, ஸ்ரீதேவி போன்றோர் ஏற்கனவே நடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
தேவயானி திருமதி தமிழ் என்ற படத்தில் நடித்து இரண்டாவது ரவுண்டை துவங்கியுள்ளார். இவர் விஜய், சூர்யா, அஜீத் போன்றோருடன் நடித்துள்ளார். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கினார். டி.வி. தொடர்களில் மட்டும் நடித்து வந்தார்.
நடிகை பூர்ணிமா ஜில்லா படத்தில் விஜய்யுடன் நடிக்கிறார். இவர் 1980-களில் தமிழ், மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகியாக கலக்கியவர். நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்கிறார்.
நடிகை சுகன்யா சந்திரா என்ற படம் மூலம் திரையுலகில் மறுபிரவேசம் எடுத்துள்ளார். சிம்ரன் துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யாவுடன் நடிக்கிறார். நிரோஷாவும் மீண்டும் நடிக்கிறார்.
முன்னாள் கதாநாயகி மதுபாலாவும் மீண்டும் நடிக்க வந்துள்ளார். அவர் கூறும்போது பாலச்சந்தரால் தமிழ் பட உலகில் பிரபலமானேன். ரோஜா, ஜென்டில்மேன் போன்ற வெற்றி படங்களில் நடித்தேன். திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டேன். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். வயதானாலும் அழகு கெடாமல் பாதுகாத்தேன். தற்போது பழைய நடிகர் நாகேஸ்வரராவ் பேரன் சமந்த் நடிக்கும் தெலுங்கு படத்தில் அவருக்கு அம்மாவாக நடிக்கிறேன் என்றார்.
ரஜினி, மோகன்லால், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த ஷோபனாவும் மீண்டும் நடிக்கிறார். இவர் இரண்டு முறை தேசிய விருது பெற்றவர். ஜோதிகா நடித்த சந்திரமுகி படத்தின் மலையாள பதிப்பான மணிசித்ரதாமு படத்தில் நடித்தார். திருமணம் செய்து கொள்ளவில்லை. பெண் குழந்தையை தத்து எடுத்து அதற்கு அனந்த நாராயணி என பெயரிட்டு வளர்க்கிறார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ரஜினியுடன் கோச்சடையான் படத்திலும் தெலுங்கு படமொன்றில் மகேஷ்பாபு அம்மாவாகவும் நடிக்கிறார்.