ஜில்லா திட்டமிட்டபடி பொங்கலுக்கு வந்துவிடுமா? இந்த சந்தேகத்தை ரசிகர்களிடமும்,விநியோகஸ்தர்களிடமும் ஏற்படுத்தியிருக்கிறது அப்படக்குழுவின் மெத்தனம். ஜில்லா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவையே மிக மிக சப்தமின்றி நடத்தி முடித்தார்கள். இதற்கென தனி ஆர்ப்பாட்டம் தேவையில்லைதான். ஆனால் படம் பொங்கலுக்கு வரப்போகிறது என்பதை அறிவிக்கும் நோக்கத்தில் ட்ரெய்லர்களை இந்நேரம் வெளியிட்டிருக்க வேண்டாமா என்பதுதான் ரசிகர்களின் குரலாக இருக்கிறது.

ஆனால் விஜய் டப்பிங் முடித்தாரா? படத்தின் முதல் பிரதி தயாராகிவிட்டதா? எப்போது சென்சார் செய்து எப்போது வரிவிலக்கு காட்சிக்கு விண்ணப்பிப்பார்கள்?. பொதுவாக விஜய் மாதிரி ஆளுங்கட்சிக்கு அதிருப்தி லிஸ்டில் இருப்பவர்களின் படங்களை இந்த வரிவிலக்கு குழு பார்ப்பதற்கே பல வாரங்கள் எடுத்துக் கொள்ளும். இதற்கெல்லாம் தயாராக வேண்டும் என்றால் படத்தை ஜனவரி 1 ந் தேதிக்குள் முடித்து முதல் பிரதி எடுத்திருக்க வேண்டும். இது எதுவுமே நடக்கவில்லை ஜில்லாவை பொருத்தவரை. இப்போதுதான் எடிட்டரை மாற்றியிருக்கிறார்கள். அவர் படத்தை முடித்து அதற்கப்புறம் பிற வேலைகள் நடந்து.... ஹ்ம்ம்ம்.... மலைப்பாகதான் இருக்கிறது.