அவுஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் ரோனி அபொட் புதியதொரு குடிவரவுத் திட்டத்தை அறிவித்துள்ளார்.
தேர்தலுக்கு மூன்று வாரங்கள் எஞ்சியிருக்கும் நிலையில் இன்று அறிவிக்கப்பட்ட குடிவரவுத் திட்டம் பல கடுமையான ஏற்பாடுகளைக் கொண்டதாக அமைந்துள்ளது.
தேர்தலில் தாம் வெற்றி பெறும் பட்சத்தில், ஆட்கடத்தல்காரர்களையும், புகலிடக் கோரிக்கையுடன் படகுமூலம் வருவோரையும் கையாள்வதற்காக இராணுவ கட்டளைத் தளபதியொருவரை நியமிக்கப் போவதாக அபொட் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டம் Operation Sovereign Borders என்ற பெயர் கொண்டு அழைக்கப்படும். இனிமேலும் புகலிடக் கோரிக்கைகளுடன் எவரும் அவுஸ்திரேலியாவிற்குள் வரவிடாமல் தடுப்பது இதன் நோக்கமாகும்.
புகலிடக் கோரிக்கையுடன் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்து, இன்னமும் விசாரிக்கப்படும் வெளிநாட்டவர்களின் வழக்குகளின் தேக்க நிலையை கையாளும் ஏற்பாடு பற்றியும் தமது பேச்சாளருடன் ரோனி அபொட் விபரித்தார்.
இதன் பிரகாரம், அவுஸ்திரேலியாவில் தமது அகதி அந்தஸ்து தீர்மானிக்கப்படும் வரையில் காத்திருக்கும் சுமார் 30,000 பேர் நிரந்தர வதிவிட உரிமைகளைப் பெற மாட்டார்கள். உண்மையான அகதிகளென எவரேனும் தீர்மானிக்கப்படும் பட்சத்தில், அவருக்கு தற்காலிக விசா வழங்கப்படும். அகதி அந்தஸ்து நிராகரிக்கப்படுமானால், அத்தகைய ஒருவர் மேன்முறையீடு செய்யவும் முடியாது.
புகலிடம் என்பது அவுஸ்திரேலியாவில் மிகவும் உணர்வுபூர்வமான விடயமாக நோக்கப்படுகிறது. அது தேர்தல் பிரசாரத்தில் மிகவும் பேசப்படும் விவகாரமாகவும் மாறியிருக்கிறது. தேர்தல் செப்ரெம்பர் 7ஆம் திகதி நடைபெறும்