நீதியானதும் நேர்மையானதுமான ஒரு தேர்தலை வடக்கில் எதிர்பார்க்கமுடியாதென தேர்தல் ஆணையாளரிடம்
தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத் தேர்தல் அடக்குமுறைகளும் மோசடிகளும் நிறைந்த தேர்தலாகவே அமையும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தல் ஆணையாளர் தலைமையில் இன்று யாழில் நடைபெற்ற கட்சிகளுக்கிடையிலான கலந்துரையாடல் ஒன்றின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப் பிரிய யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் வேட்பாளர்களுடன் கலந்துரையாடியுள்ளார். இக் கலந்துரையாடலில் சிவாஜிலிங்கம் கருத்துத் தெரிவிக்கையில்,
வல்வெட்டித்துறைச் சந்தியில் தமிழ் மக்களின் பூர்வீக நிலமான நாலு ஏக்கர் ஆதனப் பகுதியை சுவீகரித்து அவ்விடத்தில் பாரிய ஒரு படைத்தளத்தை இராணுவம் அமைத்துள்ளது.
இக் காணி உரிமையாளர்களிடம் வீடுகளைக் கையளிக்கும் ஒரு நிகழ்வு செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி பருத்தித்துறைப் பிரதேச சபையில் நடைபெறவுள்ளது. இதுவொரு தேர்தல் முறைகேடாகும். இதனை தேர்தல் ஆணையாளர் தடுக்க வேண்டும் எனக் கோரினார்.
அப்பொழுது குறுக்கிட்ட தேர்தல்கள் ஆணையாளர் அக்கூட்டத்தினை தன்னால் தடுக்க முடியாது எனவும் வேட்பாளர்கள் இக்கூட்டத்தில் தன்னால் தடுக்கமுடியும் எனத் தெரிவித்தார்.