எகிப்தில் பிரசித்த பெற்ற கன்னி மரியாள் தேவாலயம் உட்பட 52 தேவாலயங்களை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் முகாமிட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி முர்சியின் முஸ்லிம் பிரதர்குட் இயக்கத்தை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களை கலைக்க இராணுவம் முற்பட்டது.
அப்போது பாதுகாப்பு படையினருக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதில், 638 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதில் பலரின் நிலைமை மோசமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனையடுத்து எகிப்தில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே அரசப் படைகளுக்கும், முர்சியின் ஆதரவாளர்களுக்கும் இடையே நடைபெறும் உள்நாட்டு போர் கடந்த இரு நாட்களாக மெல்ல மெல்ல மதக்கலவரமாக மாறி வருகிறது.
பிரசித்தி பெற்ற கன்னி மரியாள் தேவாலயம் உள்பட தெற்கு எகிப்தில் உள்ள அசியுட், மினியா போன்ற இடங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை போராட்டக்காரர்கள் தீயிட்டு எரித்துள்ளனர்.
மேலும் தேவாலயங்களை ஒட்டியுள்ள கிறிஸ்தவ நூல்கள் விற்பனை மையங்களும் தீக்கிரையாகியுள்ளன.
இதுவரை 52 தேவாலங்களின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதனால் எகிப்தில் வாழும் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.