
டெல்லியில் நேற்று நடைபெற்ற பிசிசிஐயின் அவசரக் கால கூட்டத்தில் கிரிக்கெட் நடவடிக்கைகளிலிருந்து குந்த்ரா அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதுகுறித்து குந்த்ரா கூறுகையில், பிசிசியின் இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது, அதிகார வர்க்கத்தினர் என் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. உண்மை நிலை அறியாமல் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது வேதனை அளிக்கிறது.
விளையாட்டின் மீதான எனது ஆர்வம் குறித்து அனைவருக்கும் தெரியும். இந்தியாவில் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.
ஆனால் என் மீதான குற்றச்சாட்டுகளால் நான் காயப்பட்டுள்ளேன். பிசிசிஐயின் தற்போதைய நடவடிக்கையால், விளையாட்டுத் துறையிலான எனது நேர்மை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
விளையாட்டில் சூதாட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று நினைத்திருந்தால் வெளிநாடுகளில் சட்டப் பூர்வமான முறையில் உள்ள இணையத்தின் வழியாக அதனை செய்திருக்க முடியும்.
ஆனால் ஊழல் தடுப்பு பாதுகாப்பு அமைப்பின் விதிப்படி ஐபிஎல் அணியின் உரிமையாளர் சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது என்பதால் அவ்வாறு செய்யவில்லை. இதனை மக்கள் உணர வேண்டும், நீதியின் மீதும், இந்தியா மீதும் எனக்கு நம்பிக்கை உண்டு என்று தெரிவித்துள்ளார்.