
இதுபற்றி டெல்லி கமிஷனர் நீரஜ் குமார் நிருபர்களிடம் கூறுகையில், 'ராஜ் குந்த்ரா தனது சொந்த அணி மீது தரகர்கள் மூலம் பந்தயம் கட்டியதை ஒப்புக்கொண்டிருக்கிறார். பந்தயம் கட்டியதால் பெருமளவு பணத்தை அவர் இழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அவர் தனது பார்ட்னர் உமேஷ் கோயங்கா மூலம் சூதாட்டத்தில் பணத்தை வைத்துள்ளார்' என்றார். கோயங்காவிடம் கடந்த சில நாட்களாக போலீசார் விசாரணை நடத்தியபோது, குந்த்ராவின் சூதாட்டத்தை அம்பலப்படுத்தியுள்ளார். ஆனால், இந்த குற்றச்சாட்டை குந்த்ராவின் மனைவியும், ராஜஸ்தான் அணியின் மற்றொரு உரிமையாளருமான ஷில்பா ஷெட்டி மறுத்துள்ளார். குந்த்ராவின் பெயரை அவர் தவறாக பயன்படுத்தியிருக்கிறார்.
எங்கள் அணியின் உரிமையாளர்கள் எந்த தவறும் செய்யவில்லை. இதில் உள்ள உண்மைகளைக் வெளிக்கொண்டு வருவதற்கு போலீசாரின் விசாரணைக்கு நாங்கள் உதவி செய்வோம் என்று ஷில்பா ஷெட்டி கூறினார். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக ஐ.பி.எல். விளையாட்டுகளில் பந்தயம் கட்டிய விவரத்தை குந்த்ரா தெரிவித்திருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அணியில் இணைந்துள்ள எந்த நபராக இருந்தாலும் போட்டிக்கு பந்தயம் கட்டியது கண்டுபிடிக்கப்பட்டால், பி.சி.சி.ஐ. விதிமுறைகளின்படி, அவர் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். ஐ.பி.எல். உரிமையாளர் இந்த தவறை செய்தால், அந்த அணியை உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.